Friday, January 23, 2015

குளிர்ச்சியும் வாயுவும்!

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: குளிர்ச்சியும் வாயுவும்!

Author: எஸ். சுவாமிநாதன்

First Published: Aug 12, 2012 12:00 AM

எனக்கு வயது 64. காலையில் படுக்கையில் இருந்து எழுந்தால் நடுமுதுகு மற்றும் இடுப்பில் வலி உள்ளது. அரை மணி நேர நடமாட்டத்துக்குப் பிறகுதான் இயல்புநிலை வருகிறது. இந்த உபாதை மாற ஆயுர்வேத சிசிக்சை முறைகள் ஏதேனும் உள்ளதா?

டி.என்.வி.நீலகண்டன்,  பள்ளிக்கரணை, சென்னை

வாத தோஷத்தின் சேர்க்கை இல்லாமல் உடலில் வலி ஏற்படுவதில்லை என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அதிகமாக வேலை செய்வதால் சிலருக்கு வலி ஏற்படும். வாதம் பிற தோஷங்களால் தடுக்கப்படாமல் தன் தனி சுதந்திரமான சீற்றத்தினால் ஏற்படும் இந்த வகை வலிக்கு "கேவலவாயு கோபம்' என்று பெயர். நாற்காலியில் சிறிது நேரம் அமர்ந்திருந்து எழும்போதோ, படுத்து உறங்கிவிட்டு எழும்போதோ சிலருக்கு வலி ஏற்படும். நகரும் தன்மையுடைய வாயுவை மற்ற தோஷங்கள் சூழ்ந்து கொள்வதால் அதன் இயல்பான தன்மைக்கு ஏற்படும் தடையினால் ஏற்படும் வலியானது "ஆவரண வாயு' என்று பெயர் பெறுகிறது. நீங்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவராக இருக்கிறீர்கள்.

ஆவரண வாயு ஏற்படக் காரணமென்ன? படுக்கும் படுக்கை விரிப்பு சில்லிட்டிருந்து அதன் மேல் வெற்றுடம்பாகப் படுப்பதாலும், குளிரூட்டப்பட்ட அறையில் உடலைக் கம்பளியால் போர்த்திக் கொள்ளாமல் படுப்பதாலும், குளிர்ந்த நீரைப் பருகிய பிறகு இரவில் படுத்தாலோ, குளிர்ச்சியான உணவையும் பானத்தையும் பருகிய பிறகு படுப்பதாலோ, இரவில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டுப் படுப்பதாலோ, இந்த ஆவரண வாயுவின் உபாதை ஏற்படக் கூடும்.

"ஸ்தம்பனம்' அதாவது விரைத்துக் கொள்ளும் உடல் நிலையை இதுபோன்ற காரணங்கள் ஏற்படுத்துவதால், வாயுவின் கதி முடக்கம் ஏற்பட்டு தசையிலும், மூட்டுகளிலும் வலியை ஏற்படுத்துகிறது. குளிர்ச்சியான ஸ்தம்பனம் எனும் விரைப்புத் தன்மைக்கு நேர் எதிரான சூட்டைத் தரும் "ஸ்வேதனம்' அதாவது வியர்வையை வரவழைக்கும் சிகிச்சை முறையினால் } ஆவரணம் எனும் சூழலிருந்து வாயுவை விடுபடச் செய்யும் சிகிச்சை முறையால் } உங்களுக்கு நிவாரணம் ஏற்படக்கூடும்.

"நாடீஸ்வேதம்' என்று ஒரு சிகிச்சைமுறை இருக்கிறது. ஆமணக்கு, சித்தாமுட்டி, கல்யாண முருங்கை, யூகலிப்டஸ், புங்கன், நொச்சி, எருக்கு போன்றவற்றின் இலைகளை தண்ணீரில் போட்டு பிரஷர் குக்கரில் வேக வைத்து, குக்கரின் மூடியின் மேலுள்ள குழாயில் ஒரு ரப்பர் டியூபை மாட்டி அதன் மூலம் வெளிப்படும் நீராவியை உங்களுடைய முதுகுத் தண்டுவடப் பகுதியை கற்பூராதி தைலம், நாராயண தைலம், ஸஹசராதி தைலம் போன்றவற்றில் ஒன்றை இளஞ்சூடாகப் பூசிய பிறகு, காட்டுவதின் மூலம் வாயு தடை நீங்கப் பெற்று, சுதந்திரம் அடைந்து விடுவதால், வலி குறைந்து குணமாக வாய்ப்பிருக்கிறது. இதற்கு மாற்று சிகிச்சையாக ஆற்று மணலை மூட்டை கட்டி சூடாக்கி, ஒத்தடம் கொடுப்பதையும் செய்யலாம். வாயுவுக்கு ஏற்படும் இந்த விடுதலையுடன் பிரச்னை ஓய்ந்துவிட்டதாக நாம் கருத முடியாது. அதன் பாதைக்குத் தடை ஏற்படுத்திய தோஷ -தாது - மலங்கள், மறுபடியும் காரணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருப்பதால், அதற்கு வழி ஏற்படாத வகையில் நீங்கள் உணவை வெதுவெதுப்பாகச் சாப்பிடுவதும், சூடான வீர்யம் கொண்ட பூண்டு, மிளகு, சீரகம், பெருங்காயம், ஓமம் போன்றவற்றின் துணை கொண்டு தயாரிக்கப்பட்ட ரஸம் - கூட்டு போன்றவை உணவாக ஏற்கப்பட வேண்டும். உடலுக்கு எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்கவும். இருமாதங்களுக்கு ஒருமுறை 15 மி.லி. சுத்தமான விளக்கெண்ணெயைச் சூடான பாலுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுக் குடல் வாயுவை நீக்கிக் கொள்ளவும், பேதி மூலமாக. சீரகம், ஓமம் போட்டுக் காய்ச்சிய வெந்நீரையே பருகவும். அஷ்ட வர்க்கம் எனும் ஆயுர்வேத கஷாய மருந்தை 15 மி.லி. எடுத்து 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிடவும். ஒரு யோகராஜ குக்குலு எனும் மாத்திரையைக் காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வரவும்.


Monday, January 19, 2015

கடுக்காய்

கடுக்காய் 

இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. உடல் உறுதி பெறவும், நோயற்ற வாழ்வைப் பெறவும், நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியம் மேம்படவும், உடல் உள்ளுறுப்புகள் பலப்படவும் உதவக்கூடிய வழிமுறைகளை, தாவரங்கள் மூலம் இயற்கை நமக்கு வாரி வழங்குகிறது. இந்த இயற்கை தரும் முறைகளை செவ்வனே பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வை வாழலாம். அவ்வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கடுக்காய்.

கடுக்காயின் தாயகம் இந்தியா. இது மிகவும் பழமையான மரம். புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம். அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது. சுமார் 4000 ஆண்டுகட்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுக்காய் மரம் ஓங்கி உயரமாக வளரும் தன்மை கொண்டது. சுமார் 20 முதல் 25 மீட்டர் உயரத்தில், அரை மீட்டர் விட்டமுடைய அடிமரத்துடன் காணப்படுகிறது. இது குளிர் காலத்தில் இலையுதிர்த்து, மார்ச் மாத வாக்கில் துளிர்க்கிறது. இலைகள் சிறுகாம்புடன் முட்டை வடிவத்துடன் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக, சிறிது மணத்துடன் காணப்படும். காய்கள் பச்சை நிறமுடையதாகவும், முதிரும்போது கரும்பழுப்பு நிறமாக நீண்ட பள்ளங்களுடைய தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டினுள் கொட்டை காணப்படும்.

கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென நமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை முறையே அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி, திருவிருதுதம் என்பதாகும். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.

சிறப்புத் தன்மைகள்

கடுக்காய் சிறந்த மருத்துவத் தன்மையுடையதாகும். வடமொழியில் 'மருத்துவரின் காதலி' எனப்படுகிறது. மருத்துவத்தில் மட்டுமின்றி பொருளாதா£ரம், தொழிலியல் துறைகளில் வெகுவாக பயன்படுகிறது. 'திரிபலா' என்பது சித்த மருத்துவத்தில் புகழ்பெற்ற ஒரு கூட்டு மருந்தாகும். இதில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்ற மூன்றும் சேர்க்கப்படுகின்றன. கடுக்காய் என்பது ஒரு கடினமான மருந்து என்று நாம் கருதுகிறோம். ஆனால் கடுக்காயை நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாக வாங்கலாம். கடுக்காயின் தோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உள்ளிருக்கும் பருப்பைப் பயன்படுத்தக்கூடாது. இதன் ஓட்டைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

பொருளாதாரப் பயன்கள்

கடுக்காய் மரத்தழைகளை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.

கடுக்காய் மரத்திலிருந்து பிசின் எடுக்கலாம்.

மரப்பட்டை பொடியிலிருந்து மோல்டிங் மாவு தயாரிக்கப்படுகிறது.

பல்வேறு தொழில்களுக்கு ஒரு உப மூலப்பொருளாக விளங்கும் டானின் சத்து கடுக்காய்த் தோலிருந்து பெறப்படுகிறது.

தோல் பதனிட டானின் பயன்படுகிறது.

துணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு நிறமூட்ட, நிலக்கரியைச் சுத்தம் செய்ய டானின் உதவுகிறது.

டானின் பிரித்தெடுத்த பின் எஞ்சும் கடுக்காய்ச் சக்கை அட்டைக் காகிதம் செய்யவும், ஒட்டுப்பசை தயாரிக்கவும் பயனாகிறது.

முற்காலத்தில் கட்டடம், கோவில் கட்ட கடுக்காய்ச்சாறு சேர்க்கப்பட்டது.

கடுக்காய் கொட்டையிலிருந்து ஒருவகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது.

குணங்கள்

வலிமையூட்டி, நீர்ப்பெருக்கி, உள்ளழலகற்றி போன்ற குணங்களைக் கொண்டுள்ளது. புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கைகால் நமச்சல், தலைநோய், இரைப்பு, தொண்டை வலி, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளைக் குணப்படுத்தும்.

மருத்துவப் பயன்கள்

கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.

மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர் விட்டுப் பாகு போலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல்புண், சுவாச காசம், மூலம், வாத நோய்கள் குணமாகும்.

மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும்.

10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.

நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப்புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.

For more info, visit at: http://www.tamilheritage.org

Friday, January 16, 2015

வயிற்றுப்புண் - அல்சர் - புற்றுநோயை குணப்படுத்தும் முள்ளங்கி


வயிற்றுப்புண் - அல்சர் - புற்றுநோயை குணப்படுத்தும் முள்ளங்கி

பதிவு செய்த நாள்: வெள்ளிக்கிழமை, ஜனவரி 16, 2:47 PM IST

க. சக்தி சுப்ரமணியன் (சித்த மருத்துவர்) 

செல்:  90424 11002 மற்றும் 90422 15986

முள்ளங்கி நாம் சாதாரணமாக உணவாக பயன்படுத்துகிற ஒன்றுதான். எனினும் அதனுள் அடங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவ குணங்களை நாம் அறிந்தோமில்லை. முள்ளங்கியில் மஞ்சள் முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி, சதுர முள்ளங்கி, வனமுள்ளங்கி, கெம்பு முள்ளங்கி என வேறு சில வகை முள்ளங்கிகளும் உண்டு. 

ஆயினும் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டவை. வெண்ணிற முள்ளங்கி யானையின் தந்தத்தைப் போன்றதாய் நீண்டும் பெரியதாய் காணப்படும். சிறுமுள்ளங்கி கார்ப்புச் சுவையும், உஷ்ணத் தன்மையும் கொண்டு இருக்கும். இது உணவுக்கு சுவையூட்டும். குரலை செம்மைபடுத்தும். வாத, பித்த சிலேத்துமம் எனப்படும் மூன்று தோஷங்களையும் சமப்படுத்தும். 

பெரு முள்ளங்கி வறட்சித் தன்மையும், குரு குணமும், வாயுத்தன்மையும் உடையது. இது மூன்று தோஷங்களையும் வளர்க்கக் கூடியது. இதை சமையலுக்கு உபயோகப்படுத்தும் முன்பு எண்ணெயிலிட்டு வதக்கிய பின் உபயோகப் படுத்தினால் மூன்று தோஷங்களையும் தணிக்க வல்லது. மஞ்சள் முள்ளங்கி இனிப்பு சுவையும், உஷ்ணமும், இலகுத் தன்மையும், உஷ்ண வீரியமும் கொண்டிருக்கும். சடராக்கினியை வளர்க்கும் மலத்தை தடுக்கும். 

சுப வாதங்களைத் தணிக்கும். முதிர்ந்த முள்ளங்கியை விட இளம் முள்ளங்கியே நன்மை தருவதாக இருக்கும். முதிர்ந்த முள்ளங்கி வீக்கத்தையும், அழற்சியையும் தோற்று விக்கும். ரத்தத்தை கெடுக்கும். உலர்ந்த முள்ளங்கி 3 தோஷங்களையும், நஞ்சையும் போக்கவல்லது. முள்ளங்கி காய்ச்சல், இழுப்பு, மூக்கு, கண், தொண்டையில் தோன்றும் நோய்கள் ஆகியவற்றையும் போக்கும். 

முள்ளங்கிக் கஞ்சி வாயில் எச்சில் ஒழுகுதல், தொண்டை கரகரப்பு, தொண்டை அடைப்பு, நாவின் சுவையின்மை, பீநசம், இருமல், கப நோய்கள் ஆகியவற்றைத் தணிக்கும். முள்ளங்கியின் பூ கப பித்தங்களைத் தணிக்கும். முள்ளங்கியில் புற்று நோயைத் தடுக்க வல்ல மருத்துவப் பொருட்கள் மலிந்துள்ளன. 

பண்டைக் காலந்தொட்டு ஈரல் நோய்கள் வந்த போது அதைப் போக்குவதற்கும் மேலும் வராது தடுப்பதற்கும் முள்ளங்கியை உண்பது என்பது வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. கந்தகச்சத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மருத்துவ வேதிப்பொருட்கள் முள்ளங்கியில் அடங்கியுள்ளன. அவை பித்த நீரை ஒழுங்காக சுரக்க உதவுகின்றன. 

இதனால் முள்ளங்கி ஆரோக்கியமான பித்தப்பை க்கும் ஈரலுக்கும் உதவுவதோடு செரிமானத்தையும் சீர்படுத்துகிறது. புதிய முள்ளங்கிக் கிழங்கில் மிகுதியான விட்டமின் சி சத்து அடங்கியுள்ளது. முள்ளங்கி கிழங்கை விட முள்ளங்கி இலையில் 6 மடங்கு விட்டமின் சி சத்து அடங்கியுள்ளது. மேலும் முள்ளங்கி கீரையில் மிகுதியான சுண்ணாம்புச் சத்தும் உள்ளது. 

மேலை நாடுகளில் பன்னெடுங்காலமாக முள்ளங்கி சாறு இருமலைத் தணிப்பதாகவும், மூட்டு வலிகளைப் போக்குவதற்கும், பித்தப்பை சம்பந்தமான நோய்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும் முள்ளங்கிச் சாறு நீண்ட காலமாகத் தொல்லை தரும் நெஞ்சகக் கோளாறுகளிலிருந்து நிம்மதி பெறவும், வாயுக் கோளாறுகளை விரட்டவும் மற்றும் பேதி, தலைவலி, தூக்கமின்மை ஆகிய துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும் பயன்படுத்தப்படுகிறது. 

முள்ளங்கி விதைகள் வயிறு நிரம்ப இருப்பது போன்ற நிலையிலும் நெஞ்சைக் கரித்துக் கொண்டு புளிப்புடன் நாம் உண்ணும் உணவு நீண்ட நேரத்துக்குப் பிறகு செரிமானம் ஆகாமல் மேலெதிர்த்து நெஞ்சுக்கு வருவது போன்ற நிலையிலும், உண்ட உணவு சீரணமாகாமல் வயிற்றுப் போக்கை உண்டாக்குகிற போதும், நெஞ்சுக் கோழை அதிகரித்து இருமல் மற்றும் மூச்சிரைப்பு ஏற்படுகிற போதும் சிறந்த நிவாரணத்தை அளிக்க வல்லது. 

* முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து உள்ளுக்கு கொடுப்பதால் குத்திருமல் குணமாகும். மேலும் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும். 

* முள்ளங்கியைப் பயிர் செய்து இரண்டு மூன்று இலைகள் வந்தவுடன் அந்த இலைகளில் ஒரு பிடி அளவு எடுத்து 2 முதல் 4 கிராம் அளவு சாதாரண சோற்று உப்பு சேர்த்து காலை, மாலை என 2 வேளையும் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை என்கிற சிறுநீக மற்றும் பால்வினை நோய்களால் உண்டாகும் நீரடைப்பு நீங்கும். மலமும் வெளியேறும். 

* 50 முதல் 100 கிராம் வரையில் முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து குடித்து சிறுநீர் வர சிறுநீர் தாரளமாய் இறங்கும். 

* கிழங்கைப் பச்சையாகவோ, சமைத்தோ உண்பதால் சுவை யின்மை நீங்கிப் பசி உண்டாகும். உணவையும் சீரணமாக்கும். 

* அந்தி, சந்தி என இருவேளைகளும் முள்ளங்கி சாறு செய்து பருகுவதால் மூலநோய்கள் குணமாகும். இளம் முள்ளங்கி கீரையின் சாற்றை எடுத்து மெல்லிய துணியால் வடிகட்டி அதில் போதிய சர்க்கரை சேர்த்து அருந்திவர மஞ்சள் காமாலை குணமாகும். 

ஒரு தேக்கரண்டி முள்ளங்கி கிழங்குச் சாற்றோடு சம அளவு தேனும், உப்பும் சேர்த்து சாப்பிட இருமல், நெஞ்சக கோளாறுகள், இதய வலி, வயிற்று உப்பிசம், தொண்டைப்புண், தொண்டைக் கட்டு ஆகியன குணமாகும். முள்ளங்கி விதையை நன்றாக இடித்த காடி சேர்த்து குழைத்தப் பசையாக்கி வெண்புள்ளிகளின் மீது தடவி வர தோலின் நிறம் மாறி வரும். 

தினம் இப்படிச் செய்தால் நலம். இதையே படர் தாமரை, முகத்தில் உள்ள கரும் புள்ளிகள், எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீது பூசி வர நன்மை உண்டாகும். இளம் முள்ளங்கித் துண்டுகளுடன் காரட், பீட்ரூட் போன்றவற்றையும் துண்டுகளாக்கி ஒன்று சேர்த்து சிறிது எலுமிச்சை சாறு உடன் உப்பு சிறிது சேர்த்து சாலட் போல உணவுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு நன்மை தரும். 

உள்ளுறுப்புகள் பலம் பெறும். சிறுநீரக ஈரல் தொடர்பான நோய்கள் விலகும். கோடை காலத்தில் முள்ளங்கி சாற்றை சிறிது சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி பெறும். முள்ளங்கியை ஏதேனும் ஓர் வகையில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் தொற்று நோய்களிலிருந்து அது நம்மைப் பாதுகாக்கும். 

அதில் அடங்கியிருக்கும் இயற்கையான சுத்திகரிப்புத் தன்மையும் மற்றும் அதிகப்படியான விட்டமின் சி சத்தும் நோயற்ற வாழ்வுக்கு வகை செய்கின்றன. வயிறு குடல் புண்பட்ட நிலையில் உள்ளவர்கள் மட்டும் முள்ளங்கியை தவிர்ப்பது நலம். 

சாதாரண உணவாகும் முள்ளங்கியில் உள்ள மருத்துவ நன்மைகளை கருத்தில் கொண்டு அடிக்கடி உணவில் சேர்ப்போம். உன்னத நலன்களைப் பெறுவோம். 

முள்ளங்கியில் அடங்கியுள்ள சத்துக்கள்

புதிதாக சேகரிக்கப்பட்ட 100 கிராம் முள்ளங்கியில் பின்வரும் சத்துக்கள் பொதிந்துள்ளன.  உயிர்ச்சத்து 1சதவீதம், மாவுச் சத்து 3% புரதச்சத்து, முழுமையான கொழுப்பு 1%, உணவாகும் நார்ச்சத்து 4%, விட்டமின்களான ஃபோலேட்ஸ் 6%, நியாசின் 1.5% பெரிடாக்ஸின் 5.5%, ரிபோஃப்ளேவின் 3%, விட்டமின் ஏ 1%, விட்டமின் சி, 

25%, விட்டமின் ஈ 9%, விட்டமின் கே1 %,ஆகியவையும் எலக்ட்ரோலைஸ் எனப்படும் நீர்ச்சத்துக்களான சோடியம் 2.5%, பொட்டாசியம் 5%, ஆகியவையும் தாதுப் பொருட்களான சுண்ணாம்புச்சத்து 2.5%, செம்புசத்து 5%, இரும்புசத்து 4%, மெக்னீசியம் 2.5%, மாங்கனீசு 2.5%, துத்தநாகம் எனப்படும் ஸிங்க் 2%, ஆகியவையும் மருத்துவ சத்துப் பொருட்களான பீட்டா கெரோட்டின் 4 மைக்ரோ கிராம், ஆல்பா கெரோட்டின் சிறிதளவும் லூட்டின் கசியாசாந்தின் 10% மைக்ரோகிராமும் அடங்கியுள்ளன. 

முள்ளங்கியின் இலை, பூ, கிழங்கு விதை ஆகிய அத்தனையும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவது ஆகும். முள்ளங்கிக் கீரையில் வளிக்குற்றமும், தீக்குற்றமும் பெருகும். வயிற்றுப் புழு, மார்பு எரிச்சல் இவை உண்டாகும். ஆயினும் வயிற்று வலியையும் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணையும் இது போக்கக்கூடிய மருந்தாக அமையும். 

சிறு முள்ளங்கியை முற்றாத இளம் நிலையில் எடுத்து உண்பதால் பல நோய்களைத் தணிக்கும் என்று அகத்தியர் குணபாடநூல் தெரிவிக்கிறது. இளம் முள்ளங்கியை உணவாக சமைத்து சாப்பிடுவதால் வாதம் எனப்படும் வாயு சம்பந்தமான நோய்கள், காப்பான் எனப்படும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், வயிற்றெரிச்சல், 

வயிற்று வலி, குத்தல், வயிற்றில் வாயு சேர்தல், எலும்பு உறுக்கி இருமல் சளித் தொல்லைகள், கடுமையான தலைநோய்கள், பல்சிலந்தி,பஇரைப்பு மூலக்கடுப்பு ஆகிய நோய்கள் அத்தனையும் முள்ளங்கியின் மணத்தை கண்ட போதே மிரண்டு ஓடி விடும். *முள்ளங்கி விதை ஆண்மையைப் பெருக்கக் கூடியது. சிறுநீரைப் பெருக்கவல்லது. மலத்தை இளக்க வல்லது. வெப்பத்தை தூண்டக் கூடியது. பசியைத் தூண்டக் கூடியது. வயிற்று நோய் களை விரட்ட வல்லது.