Friday, January 23, 2015

குளிர்ச்சியும் வாயுவும்!

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: குளிர்ச்சியும் வாயுவும்!

Author: எஸ். சுவாமிநாதன்

First Published: Aug 12, 2012 12:00 AM

எனக்கு வயது 64. காலையில் படுக்கையில் இருந்து எழுந்தால் நடுமுதுகு மற்றும் இடுப்பில் வலி உள்ளது. அரை மணி நேர நடமாட்டத்துக்குப் பிறகுதான் இயல்புநிலை வருகிறது. இந்த உபாதை மாற ஆயுர்வேத சிசிக்சை முறைகள் ஏதேனும் உள்ளதா?

டி.என்.வி.நீலகண்டன்,  பள்ளிக்கரணை, சென்னை

வாத தோஷத்தின் சேர்க்கை இல்லாமல் உடலில் வலி ஏற்படுவதில்லை என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அதிகமாக வேலை செய்வதால் சிலருக்கு வலி ஏற்படும். வாதம் பிற தோஷங்களால் தடுக்கப்படாமல் தன் தனி சுதந்திரமான சீற்றத்தினால் ஏற்படும் இந்த வகை வலிக்கு "கேவலவாயு கோபம்' என்று பெயர். நாற்காலியில் சிறிது நேரம் அமர்ந்திருந்து எழும்போதோ, படுத்து உறங்கிவிட்டு எழும்போதோ சிலருக்கு வலி ஏற்படும். நகரும் தன்மையுடைய வாயுவை மற்ற தோஷங்கள் சூழ்ந்து கொள்வதால் அதன் இயல்பான தன்மைக்கு ஏற்படும் தடையினால் ஏற்படும் வலியானது "ஆவரண வாயு' என்று பெயர் பெறுகிறது. நீங்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவராக இருக்கிறீர்கள்.

ஆவரண வாயு ஏற்படக் காரணமென்ன? படுக்கும் படுக்கை விரிப்பு சில்லிட்டிருந்து அதன் மேல் வெற்றுடம்பாகப் படுப்பதாலும், குளிரூட்டப்பட்ட அறையில் உடலைக் கம்பளியால் போர்த்திக் கொள்ளாமல் படுப்பதாலும், குளிர்ந்த நீரைப் பருகிய பிறகு இரவில் படுத்தாலோ, குளிர்ச்சியான உணவையும் பானத்தையும் பருகிய பிறகு படுப்பதாலோ, இரவில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டுப் படுப்பதாலோ, இந்த ஆவரண வாயுவின் உபாதை ஏற்படக் கூடும்.

"ஸ்தம்பனம்' அதாவது விரைத்துக் கொள்ளும் உடல் நிலையை இதுபோன்ற காரணங்கள் ஏற்படுத்துவதால், வாயுவின் கதி முடக்கம் ஏற்பட்டு தசையிலும், மூட்டுகளிலும் வலியை ஏற்படுத்துகிறது. குளிர்ச்சியான ஸ்தம்பனம் எனும் விரைப்புத் தன்மைக்கு நேர் எதிரான சூட்டைத் தரும் "ஸ்வேதனம்' அதாவது வியர்வையை வரவழைக்கும் சிகிச்சை முறையினால் } ஆவரணம் எனும் சூழலிருந்து வாயுவை விடுபடச் செய்யும் சிகிச்சை முறையால் } உங்களுக்கு நிவாரணம் ஏற்படக்கூடும்.

"நாடீஸ்வேதம்' என்று ஒரு சிகிச்சைமுறை இருக்கிறது. ஆமணக்கு, சித்தாமுட்டி, கல்யாண முருங்கை, யூகலிப்டஸ், புங்கன், நொச்சி, எருக்கு போன்றவற்றின் இலைகளை தண்ணீரில் போட்டு பிரஷர் குக்கரில் வேக வைத்து, குக்கரின் மூடியின் மேலுள்ள குழாயில் ஒரு ரப்பர் டியூபை மாட்டி அதன் மூலம் வெளிப்படும் நீராவியை உங்களுடைய முதுகுத் தண்டுவடப் பகுதியை கற்பூராதி தைலம், நாராயண தைலம், ஸஹசராதி தைலம் போன்றவற்றில் ஒன்றை இளஞ்சூடாகப் பூசிய பிறகு, காட்டுவதின் மூலம் வாயு தடை நீங்கப் பெற்று, சுதந்திரம் அடைந்து விடுவதால், வலி குறைந்து குணமாக வாய்ப்பிருக்கிறது. இதற்கு மாற்று சிகிச்சையாக ஆற்று மணலை மூட்டை கட்டி சூடாக்கி, ஒத்தடம் கொடுப்பதையும் செய்யலாம். வாயுவுக்கு ஏற்படும் இந்த விடுதலையுடன் பிரச்னை ஓய்ந்துவிட்டதாக நாம் கருத முடியாது. அதன் பாதைக்குத் தடை ஏற்படுத்திய தோஷ -தாது - மலங்கள், மறுபடியும் காரணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருப்பதால், அதற்கு வழி ஏற்படாத வகையில் நீங்கள் உணவை வெதுவெதுப்பாகச் சாப்பிடுவதும், சூடான வீர்யம் கொண்ட பூண்டு, மிளகு, சீரகம், பெருங்காயம், ஓமம் போன்றவற்றின் துணை கொண்டு தயாரிக்கப்பட்ட ரஸம் - கூட்டு போன்றவை உணவாக ஏற்கப்பட வேண்டும். உடலுக்கு எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்கவும். இருமாதங்களுக்கு ஒருமுறை 15 மி.லி. சுத்தமான விளக்கெண்ணெயைச் சூடான பாலுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுக் குடல் வாயுவை நீக்கிக் கொள்ளவும், பேதி மூலமாக. சீரகம், ஓமம் போட்டுக் காய்ச்சிய வெந்நீரையே பருகவும். அஷ்ட வர்க்கம் எனும் ஆயுர்வேத கஷாய மருந்தை 15 மி.லி. எடுத்து 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிடவும். ஒரு யோகராஜ குக்குலு எனும் மாத்திரையைக் காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வரவும்.


No comments:

Post a Comment